கொடைக்கானல் பஸ்நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்

கொடைக்கானல் பஸ்நிலையத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவு நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அரசு பஸ் வெளியேற முடியாமல் நின்ற காட்சி.
சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் அரசு பஸ் வெளியேற முடியாமல் நின்ற காட்சி.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் தற்போது கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் சாரல்மழை பெய்து இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நகர் பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை பஸ்நிலையத்தில் நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்கள் மற்றும் ஒட்டல்களுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பஸ்களை எடுக்க முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் பஸ்நிலைய பகுதியில் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ் டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது. கோடைகால சீசனின்போது போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் போதுமான வாகனநிறுத்துமிடங்கள் இல்லாததால் இந்த பிரச்சினை தொடர்கிறது.

நீண்டகால கோரிக்கையான மல்டிலெவல் பார்க்கிங் என்பது ஆய்வுப்பணி மேற்கொள்ளும் நிலையிலேயே உள்ளது. இதனால் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்களை நியமித்து வெளிவாகனங்கள் உள்ளே வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com