வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்துவிட்டனர்.தக்காளியின் வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
வரத்து குறைவால் தக்காளி விலை ரூ.110 ஆக அதிகரிப்பு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
Published on

போரூர்:

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இந்த நிலையில் வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மேலும் அதிகரித்து சதத்தை தாண்டி உள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.80 வரை விற்கப்படுகிறது.

வெளிமார்க்கெட்டில் உள்ள கடை, காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனால் தினசரி உணவில் தக்காளி பயன்பாட்டை குறைத்து விட்டனர். தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள வியாபாரிகளும் தற்போது அதிகளவில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.

மேலும் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வரும் தக்காளி திடீரென 50 லாரிகளாக குறைந்து விட்டதால் அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தக்காளியின் விலை மேலும் உச்சம் அடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com