நகைக்கான இழப்பீடு வழங்க கோரி கேத்தனூர் வங்கி முன்பு 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்

காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் ( வயது 57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம்.

அந்த சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து வரும் ஜூலை.13ந்தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடியில் இழப்பீடு குறித்து இதுவரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி நிர்வாகம் தொடர்ந்து இழப்பீடு குறித்து முறையான அறிவிப்புகளை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டி வங்கிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகிற 13 ந்தேதி காலை 10 மணிக்கு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இப்படிக்கு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com