நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் ஆயத்தமாகும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கங்கள்
திருப்பூர்:
பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது.
வரலாறு காணாத பஞ்சு விலையால் தமிழகநூற்பாலைகளும் அனைத்து ரக நூல் விலையை கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டநிலையில், இம்மாதம் மீண்டும் ரூ.40 நூல் விலை உயர்த்தப்பட்டது. நூல் விலை உயர்வால், திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் வருகிற 16,17 ஆகிய 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது என ஜவுளி தொழில் அமைப்பினர் முடிவு செய்தனர்.
அதன்படி திருப்பூர், கரூர், ஈரோடு உள்பட மாநிலம் முழுவதும் ஜவுளித்துறையினர் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். போராட்டத்துக்கு 36 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் (டீமா) முத்துரத்தினம் கூறுகையில்,
பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். நூல் இறக்குமதி வரியை நீக்கவேண்டும். யூக வணிகத்தில் இருந்து பருத்தியை விடுவித்து அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கவேண்டும்.நூற்பாலைகள்கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலையை குறைக்கவேண்டும் என்றார்.
பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதிகரித்து வரும் நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, மே 16, 17 ஆகிய இரு நாட்கள், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
பனியன் நிறுவனங்களுடன் இணைந்து, இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறுகையில்,
பஞ்சு பதுக்கல், ஏற்றுமதிக்கு தடை விதித்தல்,நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதற்கிடையே, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தன. அவற்றுடன் இணைந்து மே 16, 17 ஆகிய 2 நாட்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும்என்றார். நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் 50 சதவீத உற்பத்தி மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 15 நாட்களுக்கு புதிதாக நூல் வாங்குவதில்லை என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் பஞ்சு, நூல் உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் வருகிற 17, 18-ந் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

