சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம் வைத்து வழிபாடு

முருகப்பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுப் பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி  கோவில்  உள்ளது. இந்த கோவிலானது  கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப்பெருமான் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி விளங்குகிறது.

முருகப்பெருமான் பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுப் பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். 

இந்த உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தைக் கூறினால், சுவாமியிடம் பூக்கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவுப் பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அதே வேளையில் பக்தரின் கனவில் அடுத்த பொருள் உத்தரவாகும் வரை உத்தரவுப் பெட்டியில் அந்தப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இந்நிலையில் காங்கயம் வட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் தண்ணீர், சிவலிங்கம், சின்ன சங்கு, நாணயங்கள், மணல் ஆகிய பொருட்கள் வந்தது. இதையடுத்து அந்த பொருட்கள் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு முன்பாக கடந்த 2021 அக்டோபர் 5-ந் தேதி முதல் நெல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com