

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கடத்தூர், கோமதியம்மன் உடனுறை அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு துவங்கியது. முதல் ஜாம பூஜையின் போது பால், தயிர், நெய், கோமியம் உள்ளிட்ட பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தன காப்பு செந்நிற பட்டு, வில்வமாலையுடன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
இன்று அதிகாலை 3 மணிக்கு 4-ம் ஜாம பூஜையில் கரும்புச்சாறு அபிஷேகம், ஜவ்வாது காப்பு, பச்சைப்பட்டு, நந்தியாவட்டை பூ மாலை அலங்காரம் என நான்கு ஜாம பூஜை மற்றும் சண்டிகேஸ்வரர், நந்திதேவர் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல் குமரலிங்கம், காசிவிஸ்வநாத சுவாமி மற்றும் தத்தாத்ரேய சுவாமி கோவில், கொழுமம் தாண்டேஸ்வரசுவாமி கோவில்,உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா நேற்று இரவு நடந்தது.
உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலையிலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றதாகும்.மலைமேல் பஞ்சலிங்கங்கள், அதிலிருந்து விழும் அருவி, மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் என ஆன்மிக சிறப்பு பெற்ற தலமாக உள்ளது.
இக்கோவிலில் சிறப்பு அம்சமாக சிவராத்திரியன்று, மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக, கிராம மக்கள், மலைவாழ் மக்கள் கொண்டு வரும் திருச்சப்பரம் நிறுவப்படுவது பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக உள்ளது.
இதற்காக நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு மரத்தினால் செய்யப்பட்டு, மும்மூர்த்திகளுக்கும் உரிய கோபுர கலசங்கள் என அழகான வேலைப்பாடுகளுடன் பூலாங்கிணர் கிராம மக்கள் தயார் செய்து தானியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
நேற்று அதிகாலை பக்தர்கள் புடைசூழ திருச்சப்பரம் ஊர்வலம் துவங்கியது. வாளவாடி, தளி உள்ளிட்ட வழியோர கிராமங்களில், பொதுமக்கள் திருச்சப்பரத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
விவசாயம் செழிக்கவும், மகசூல் பெருகவும், நோய், நொடியின்றி மக்கள் வாழவும் வேண்டி உப்பு, மிளகு, நெற் கதிர்கள், சிறு தானியங்கள், பழம், தேங்காய் மற்றும் காய்கறிகள் என விளை பொருட்களை திருச்சப்பரத்தின் மீது வீசி வழிப்பட்டனர்.
கிராமங்கள் தோறும் மண்டக படிகள் அமைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.கிராமங்கள் திருவிழா கோலம் பூண்டதோடு நீர் மோர், பானகம், இளநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3மணிக்கு கோவிலுக்கு அருகே யானை உரசும் பாறை அருகே திருச்சப்பரம் எழுந்தருளியது.
திருமூர்த்திமலைப்பகுதிகளில் வசிக்கும் மாவடப்பு, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் மக்கள் குடியிருப்புகளிலிருந்து வந்த அம்மக்கள் தாங்கள் வனங்களில் சேகரித்த தேன், விளைவித்த மலைக்காய்கறிகள், தினை உள்ளிட்ட பொருட்களை சுவாமிகளுக்கு படைத்து வழிபட்டனர்.
பாரம்பரிய மலைவாழ் மக்கள் இசை, நடனத்துடன் திருச்சப்பரம் கோவில் வளாகத்திற்கு சென்றது. அங்கு கோவிலை சுற்றி வந்து பக்தர்களின் கோஷம் முழங்க, திருச்சப்பரம் மும்மூர்த்திகளின் மூலாலய கோபுரமாக நிறுவப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.மகாசிவராத்திரியை முன்னிட்டு சுற்றுப்புற கிராம மக்கள் நடை பயணமாகவும், விவசாயிகள், ரேக்ளா, குதிரை வண்டிகளில் வந்ததால் திருமூர்த்திமலைக்கு செல்லும் வழித்தடங்கள் களை கட்டியது.
திருச்சப்பரம் கோபுரமாக நிறுவப்பட்டதை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு மகா சிவராத்திரி பூஜைகள் துவங்கின. புண்யாகவாசனம், முதற்கால யாக பூஜை, சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இரவு 10மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இன்று அதிகாலை 2 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், 4மணிக்கு, நான்காம் கால பூஜையும், அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், 16 தீபங்கள் ஒளிரும் தரிசனமான சோடச உபசார தீபாராதனை நடைபெற்றது.
இரு ஆண்டுக்கு பின் சிவராத்திரி விழா சிறப்பாக நடந்ததால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.