கடைகளில் ஆடுகளை வெட்டினால் சீல்வைப்பு - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

பெரும்பாலான வியாபாரிகள் சுகாதாரமற்ற முறையிலும், அருவெறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஆடுகளை வதை செய்வது வழக்கமாக உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி சார்பில் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தை ஒட்டி மாநகராட்சி ஆடு வதைக்கூடம் உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் செயல்படும் ஆட்டிறைச்சி கடையினர், இந்த கூடத்தில் உரிய கட்டணம் செலுத்தி ரசீது பெற்று ஆடுகளை சுகாதாரமான முறையில் வெட்டி இறைச்சி விற்பனை செய்ய வேண்டும்.

நகரப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான இறைச்சி வியாபாரிகள் இந்த கூடத்துக்கு ஆடுகளை கொண்டு வந்து வெட்டாமல் தங்கள் கடைகள், பொது இடங்களில் ஆடுகளை வதைசெய்து இறைச்சி விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.

கூடம் அமைந்துள்ள இடம் தூரத்தில் உள்ளதாலும், மாநகராட்சிக்கு இதற்கென கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் பெரும்பாலான வியாபாரிகள் சுகாதாரமற்ற முறையிலும், அருவெறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஆடுகளை வதை செய்வது வழக்கமாக உள்ளது. இதனால் ஆடு வதைக்கூடம் முறையாக இயங்காமல் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதுகுறித்த புகார்களையடுத்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அனைத்து மண்டல சுகாதார அலுவலர்களுக்கும் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தங்கள் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு செய்து ஆடுவதைக் கூடம் பயன்படுத்தாமல் தன்னிச்சையாக ஆடு வெட்டும் கடைகள் மீது ‘சீல்’ வைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com