பாதை வசதி- வீடுகள் இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்

அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆழியாறு அணை வழியாக கீழே வரவேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே,தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு குருமலை மற்றும் மேல் குருமலை, ஈசல்திட்டு அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. 

இங்கு செல்ல திருமூர்த்தி மலையில் இருந்து வனப்பகுதி வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மலைவாழ் மக்கள் அவசர தேவைக்கு கூட நடந்தே வரவேண்டிய நிலை உள்ளது.

அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்றால் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆழியாறு அணை வழியாக கீழே வரவேண்டும். 

இல்லையெனில் உடல் நலம் குன்றியவர்களை தொட்டில் கட்டி எடுத்து வந்து உடுமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலையே உள்ளது.

இந்நிலையில் அம்மலைவாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக ,வன உரிமைச் சட்டப்படி சாலை அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் மனு கொடுத்தனர். 

விரைவாக சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மேலும் ஜல்லிப்பட்டி ஊராட்சி ஈசல் திட்டு வன குடியிருப்புக்கு கொங்குரார் குட்டையிலிருந்து சாலை அமைக்கவும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடம்பன் கோம்பை வன குடியிருப்புக்கு சாலை அமைப்பதற்கும், கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனப்பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்கள் சேகரிக்கும் சிறுவன மகசூல் பொருட்களை வனத்துறையினர் ஏலம் விடுவதை தடை செய்யக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வரும் வருவாயில் இருந்து ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் திருமூர்த்தி மலை கிராம சபைக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மலைவாழ் மக்களின் உரிமையை பாதுக்காக வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடனான சந்திப்பின் போது தளி பேரூராட்சி துணைத் தலைவர்  செல்வன் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர்  சந்திரசேகரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் திருமூர்த்திமலை மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முருகன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே  திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பு வீடுகள் சரிபாதி அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது.இதனால் நாள்தோறும் அச்சத்துடனே உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலையில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

பாதை வசதி, சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு, குடியிருக்கவீடு என அடிப்படை அத்தியாவசிய தேவைகள் முழுமையாகப் பூர்த்தி அடையாமல் இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. 

வனத்தின் காவலனாக விளங்கும் எங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வீடு அமைத்துத் தரவில்லை. தகரத்தையும் குச்சிகளை கொண்டும் அமைக்கப்பட்ட குடிலில் வாழ்ந்து வருகின்றோம். அதுவும் மழைக்காலங்களில் தண்ணீராலும் கோடை காலத்தில் காற்று மற்றும் கரையானால் சேதம் அடைந்து விடுகிறது. 

உயிரை பணயம் வைத்து தேன் எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்றவற்றுடன் சாகுபடி பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். 

இங்கு கட்டப்பட்டுள்ள 110 வீடுகளில் 40 வீடுகள் சுவரில் விரிசல் விட்டு இடிந்து விழும் சூழலில் உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் அன்றாட இரவுப்பொழுதை அச்சத்துடனே கழித்து வருகின்றோம். 

எனவே மாவட்ட நிர்வாகம் திருமூர்த்திமலை உள்ளிட்ட அனைத்து மலைவாழ் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி நாங்கள் விளைவிக்கக்கூடிய மற்றும் வனப்பகுதியில் சேகரிக்கக்கூடிய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தலுக்கு உதவி புரிய வேண்டும்.

மேலும் அவசரகால உதவிக்கு ஏதுவாக தகவல்தொடர்பு, பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com