

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நொய்யல் கரையை புனரமைத்து பொலிவுபடுத்தும் திட்ட பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
நொய்யலை மீட்டெடுக்க பலகட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், நொய்யலை மாசுபடுத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
திருப்பூரில் நொய்யல் கரையோரம் தார்ரோடு அமைத்து, வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.
செல்லாண்டியம்மன் துறை முதல் பூலாவாரி சுகுமார் நகர் வழியாக மணியகாரம்பாளையம் பாலம் வரை நொய்யல் கரைக்குள் ‘டன்’ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பையும் குவிந்துள்ளன.
கான்கிரீட் தளம் அமைத்துள்ள பகுதிகளில் குப்பை ஆற்றுக்குள் வீசப்பட்டுள்ளது. மணியகாரம்பாளையத்தில் இருந்து காசிபாளையம் வரை சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மண் வழித்தடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு நேரத்தில் வந்து காம்பாக்டிங், சாய ஆலைகளில் பயன்படுத்தும் ‘ஸ்டீம்‘ கழிவுகளையும், சாயக்கழிவுநீர் கடைசி கட்டமான ‘ஸ்லட்ஜ்’ கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. கட்டுமான கழிவுகளை கொட்டவும் அந்த இடம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:
மாநகராட்சி நிர்வாகம், பொதுநல அமைப்புகள், இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன், நொய்யல் கரையில் தேங்கியுள்ள குப்பையை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
நொய்யல் கரைக்குள் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் கம்பிவலை வேலி அமைக்க வேண்டும். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் 10 வீடுகளுக்கு ஒரு இளைஞர், இளம்பெண்கள் குழுவை ஏற்படுத்தி, அப்பகுதியில் உள்ள நொய்யல் கரைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
ஆற்றங்கரைகள் உட்பட நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டி சீர்கெடுப்பதை தவிர்க்க வார்டு வாரியாக கல்லூரி மாணவ, மாணவிகள் அடங்கிய பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நிறைவு பெறுவதற்குள் நொய்யல் ஆறு முழுவதும் மாசுபடுவதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.