உடுமலை கோவில்களில் புனரமைப்பு பணி - பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழங்கால கோவில்களின் தொன்மை மாறாமல் அவற்றை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை, புதிய திட்டத்தை செயல்படுத்தியது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் அமராவதி படுகை மற்றும் குடிமங்கலம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள் அதிக அளவு உள்ளன. இக்கோவில்களில் கல்வெட்டு, பழங்கால வாழ்வியல் முறைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்று சின்னங்களாக உள்ளன. 

பல்வேறு காரணங்களால் சிறப்பு பெற்றிருந்த பழங்கால கோவில்கள் போதிய பராமரிப்பின்றி சிதலமடைய தொடங்கின. இந்தநிலையில் பழங்கால கோவில்களின் தொன்மை மாறாமல் அவற்றை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை, புதிய திட்டத்தை செயல்படுத்தியது.

அதன்படி தொல்லியல் துறை சார்பில் கோவில்களில் ஆய்வு நடத்தப்பட்டு, புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப கருத்துரு இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

அதன்படி புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதால் கல்வெட்டு மற்றும் சிற்பங்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. அவற்றின் பழமையும் பாதுகாக்கப்படும்.

சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன், கொழுமம் வரதராஜ பெருமாள், கோட்டமங்கலம் வல்லக்கொண்டநாதசுவாமி உள்ளிட்ட கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி தொழில்நுட்ப கருத்துருவை இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பித்து பல ஆண்டுகளாகிறது. 

இக்கருத்துருவில் கோவில் கட்டப்பட்ட ஆண்டு, அவற்றின் கட்டுமான சிறப்பு, புதுப்பிப்பு பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதன்படி கல் கட்டுமானங்களை பிரித்து புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை எந்த கோவிலிலும் பணிகள் தொடங்கவில்லை. தற்போது தமிழகத்தில் பல்வேறு பழமையான கோவில்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கி உள்ள நிலையில் உடுமலை பகுதி கோவில்களிலும் பணிகளை தொடங்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com