

அவிநாசி:
திருப்பூர் ஆட்டையம்பாளையம் பகுதியில் உரிய சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வந்த கிளினிக், மருத்துவப்பணிகள் துறையினரால், ‘சீல்’ வைக்கப்பட்டது. இச்சம்பவம், மாவட்ட முழுக்க மருத்துவதுறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் மருத்துவமனை சீரமைப்பு சட்டத்தின் படி தனியார் கிளினிக் நடத்துபவர்கள், தங்கள் கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவரின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களுடன், மருத்துவப்பணிகள் துறையில் பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும்.
ஆண்டு தோறும் அந்தந்த வட்டார அளவில் செயல்படும் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் ஆய்வாளர்கள், கிளினிக்குகள் உரிமம் பெற்றுள்ளனவா, உரிம புதுப்பிப்பு பெற்றுள்ளனவா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
முக்கியமாக, கிளினிக்கில் உள்ள மருத்துவ கழிவுகள் முறையாக, விதிமுறைக்குட்பட்டு அகற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும்போது தான் அவிநாசியில் உள்ள ஒரு கிளினிக்கில் போலி மருத்துவர் இருப்பதும், இன்னொரு கிளினிக்களில் உரிய உரிம சான்று இல்லாததும் தெரியவந்தது.
இதுபோன்ற கிளினிக்குகளில் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ பணியாற்ற டாக்டர்கள் உடன்படுகின்றனர். சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளினிக்குகளுக்கு கூட சென்று சிகிச்சை வழங்குகின்றனர்.
அவர்கள் அந்த கிளினிக்குடனான பணி ஒப்பந்தத்தை பாதியில் விட்டுவிட்டால், வேறு மருத்துவரை நியமித்தால், அவர்களது பெயரில், கிளினிக் உரிமையாளர்கள் சான்று வாங்க வேண்டும். ஆனால் பலர் அவ்வாறு செய்வதில்லை.
கிளினிக்கிற்கு வராத மருத்துவரின் பெயரில் உரிம சான்று வாங்கி வைத்து செயல்பட்டாலும் அது விதிமீறல் தான்’ என்கின்றனர் சுகாதார துறையினர். இது குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் பிரேமலதா கூறுகையில், அவிநாசி, ஆட்டையம்பாளையத்தில் உள்ள கிளினிக் உரிமையாளர், அதை விரிவுபடுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
அதனடிப்படையில் கள ஆய்வு செய்த போது அந்த கிளினிக் உரிய சான்று இல்லாமல் செயல்படுவது தெரியவந்தது. அங்கு பணிபுரியும் செவிலியர்களின் கல்வித்தகுதி கூட, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் பெறப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறு உரிய அனுமதியின்றி விதிமீறி செயல்படும் கிளினிக், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.