

திருப்பூர்:
திருப்பூரில் பின்னலாடைகளுக்கு தையல் கட்டணம் நிர்ணயிப்பதற்காக சைமா சங்கம் மற்றும் தையல் நிலைய உரிமையாளர் சங்கம் (பவர்டேபிள் சங்கம்) இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
முதல் ஆண்டில் 30 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் தையல் கட்டண உயர்வு கோரிக்கையை பவர்டேபிள் சங்கம் முன்வைத்துள்ளது. இருதரப்பு சங்கத்தினரும் 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
6-வது சுற்றில் ஆடைகளுக்கு சதவீத அடிப்படையில் வேண்டாம், ரகம் வாரியாக கட்டண உயர்வு நிர்ணயிக்கலாம் என ‘சைமா’ தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு பவர்டேபிள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 7-வது சுற்று பேச்சுவார்த்தை சைமா அரங்கில் நடந்தது.
சைமா சங்கம் தரப்பில், தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன். பவர்டேபிள் சங்கம் தரப்பில் தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன், உதவி தலைவர் பொன்சங்கர் பங்கேற்றனர்.
இருதரப்பினரும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். எங்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு வருகிறோம். நீங்களும் உங்கள் சங்க பவர்டேபிள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யுங்கள்.
அதன்பின் அடுத்த சுற்று பேச்சு நடத்தலாம். 8-வது சுற்றில், கட்டண உயர்வை பேசி முடிவு செய்துவிடலாம் என்றனர் சைமா தரப்பினர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பவர்டேபிள் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.