விசைத்தறிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது- ரூ.100 கோடி காடாத்துணி உற்பத்தி பாதிப்பு

வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தி கூலி உயர்வை பெற்றாக வேண்டும் என்பதில் விசைத்தறி உரிமையாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக பல்லடத்தில் விசைத்தறி கூடம் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்ததை  படத்தில் காணலாம்.
வேலைநிறுத்தம் காரணமாக பல்லடத்தில் விசைத்தறி கூடம் தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.

புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து வந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்த 24.11.2021-ந் தேதி கோவை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்முன்னிலையில் பல்லடம் ரகத்திற்கு 20சதவீதம், சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தன போக்கைக் கண்டித்து 2 மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங் கினர்.  திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ‘பல்லடம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், மங்கலம், 63 வேலம்பாளையம், கண்ணம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய 9 சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இத்தொழிலை சார்ந்த 5  லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தினசரி 2 கோடி மீட்டர் காடாத்துணிகள் உற்பத்தியாகி வரும் சூழலில் வேலை நிறுத்தத்தால் தினமும் ரூ. 100கோடி  மதிப்பி லான காடாத்துணி உற்பத்தி  பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப் படுத்தி  கூலி உயர்வை பெற்றாக வேண்டும் என்பதில்  விசைத்தறி உரிமையாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

விசைத்தறியாளரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில்  அவினாசி ஜவுளி உற்பத்தியாளர்கள் மட்டுமே வந்தனர்.

இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று முதல் விசைத்தறியாளர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com