கோழி தீவனம், மருந்துகளை தமிழகத்திலேயே தயாரிக்க வேண்டும்- கறிக்கோழி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

இந்தநிலையில் கோழி தீவனங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தீவனம் மற்றும் மருந்துகளை தமிழகத்திலேயே தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி பண்ணையாளர்கள் கூறுகையில்:

கறிக்கோழி வளர்ப்புக்கு முக்கிய தீவனங்களாக மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் இவைகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது. மேலும் கோழி தீவனங்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை அதிகரிக்கிறது .

எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.

எனவே அவைகளை தமிழகத்தில் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ரெயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். 

வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கறிக்கோழிகளுக்கு நோய் தாக்காமலும், போதிய வளர்ச்சி அடைவதற்காக அவற்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி  பயன்படுத்த வேண்டியநிலை உள்ளது. கறிக்கோழி தீவனங்கள் மற்றும் மருந்துகளுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. எனவே மருந்து மற்றும் தீவனங்களை தமிழகத்திலேயே தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன் மூலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளை கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com