

உடுமலை:
உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் 2 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை கண்டறியும் வகையில் அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் இடையே கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய மாணவர்கள் மத்தியில் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் எண் கணிதம் போன்ற அடித்தளத்திறன்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக 2 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக ‘அப்ஜெக்டிவ்’ முறையில், வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் தமிழில் எழுதுதல், வாசித்தல், ஆங்கிலத்தில் எழுதுதல், வாசித்தல், கணிதம் என்ற அடிப்படையில் மாணவர்களின் திறன்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
பின்னர் அவை ஏ, பி, சி, டி என நான்கு கிரேடுகளில், மதிப்பீடு செய்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் ஆசிரியர்களின் கற்றல் நடைமுறையில் தேவையான மாற்றங்களைக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மாவட்ட அளவில் பள்ளிகளில் புதுமையான கற்றல் நடைமுறைகளை உருவாக்குதல், கல்வித்திறனை வலுப்படுத்தும் நோக்கில் அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.அதன் வாயிலாக மாணவர்கள் எந்த திறனில் பின் தங்கியுள்ளனர் என்பதை கண்டறிய முடியும்.
பின் கற்றல் நிலைகள் வகைப்பாட்டிற்கு ஏற்ப ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.மாணவர்களின் அடித்தளத்திறன்களை மேம்படுத்த ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.