

அவிநாசி:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு(ஐ.டி.ஐ.,) கடந்த 2010ல் 130 பயிற்றுனர்கள் மற்றும் 27 உதவியாளர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர்.
பயிற்றுனர்கள், மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் தேசிய தர சான்றிதழுடன் கூடிய டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள். இவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம், 12 ஆண்டு வரை தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க திருப்பூர் நிர்வாகிகள் கூறுகையில்:
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஐ.டி.ஐ., பயிற்றுனர்களுக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, ‘சம வேலைக்கு, சம ஊதியம்‘ வழங்கப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, இதுவரை ஏற்கப்படவில்லை.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசுத்துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என தெரிவித்திருந்தது.130 பயிற்றுனர்கள், 27 உதவியாளர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். சட்டசபை கூட்டத்தொடரில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றனர்.