விலை வீழ்ச்சியால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு

கடந்த சில மாதமாக தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய் நேரடியாக விற்பனைக்கும், கொப்பரையாக மதிப்பு கூட்டியும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்காக இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட கொப்பரை உலர் களங்களை விவசாயிகள் அமைத்துள்ளனர். தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கி வருகிற ஆகஸ்டு வரை வரத்து அதிகரித்து காணப்படும். இந்நிலையில் தற்போது தேங்காய், கொப்பரை மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த சில மாதமாக தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தேங்காய் ஒரு டன் ரூ.36 ஆயிரம் வரை விற்று வந்த நிலையில் தற்போது பச்சை காய் ரூ.25 ஆயிரம், கருப்பு காய் ரூ. 27 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. 

அதே போல் கொப்பரை கிலோ ரூ.85 முதல் ரூ.87 வரை மட்டுமே விற்று வருகிறது. ஆட்கள் கூலி, இடு பொருட்கள், கொப்பரை உற்பத்தி கூலி என அனைத்தும் விலை உயர்ந்த நிலையில் கொப்பரை கிலோ ரூ.140க்கு மேல் விற்றால் மட்டுமே கட்டுபடியாகும்.

தேங்காய் விலை குறைந்துள்ளதோடு கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காததால் உற்பத்தியும் பாதித்துள்ளது. தொடர் விலை வீழ்ச்சியால் உலர் களங்களில் கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை. இதே போல் தென்னந்தோப்புகளில் தேங்காய் கொள்முதலையும், வியாபாரிகள் குறைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொப்பரை உலர் களங்களில் தேங்காயை உடைத்து பருப்பை பிரித்த பிறகு மட்டை, தேங்காய் தொட்டியும் விற்பனை செய்யப்படும். மட்டையிலிருந்து தேங்காய் நார், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரச்சினை காரணமாக மட்டை விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆயிரம் மட்டை ரூ. 2,500 வரை விற்ற நிலையில் தற்போது  ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

அதையும் கொள்முதல் செய்ய தொழிற்சாலைகள் முன் வருவதில்லை. தேங்காய், கொப்பரை வர்த்தகத்தில் மந்த நிலை நிலவுவதால் தென்னை சார்ந்த உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர். தென்னை விவசாயிகளும் பாதித்து வருவதால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் கொள்முதல் அதிகரிக்க வேண்டும்.

தேங்காய் ஏற்றுமதி மற்றும் தேங்காய், கொப்பரை வர்த்தகத்தில் வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் ‘சிண்டிகேட்’ அமைத்துள்ளதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டை மில்கள் மீண்டும் பிரச்சினையில்லாமல் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com