

வெள்ளகோவில்:
வெள்ளகோவில், முத்தூர், மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. கரூர், சென்னிமலை உட்பட பல பகுதிகளில் இருந்து நூல் வாங்கி வந்து ஜக்காடு மற்றும் முறுக்கு நூல், பாலியெஸ்டர் ரகம், பெட்ஷீட் ஆகியவற்றை விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
தற்போது கோடை காலம் நிலவுவதால் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பெட்ஷீட் விற்பனை சரிந்துள்ளது. இதனால் ஒரு சில விசைத்தறி கூடங்களில் ஒரு ஷிப்ட் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த சூழலில் 20ம் நம்பர் நூல் முதல் பாலியெஸ்டர் நூல் வரை ரகத்திற்கேற்ப ஒரு கிலோவுக்கு 30 முதல் 45 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ஷீட் தயாரிப்பாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளனர்.
நூல் விலையேற்றத்தால் 200 ரூபாய்க்கு விற்ற பெட்ஷீட் 230 முதல் 245 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும் என பெட்ஷீட் வியாபாரிகள் கூறுகின்றனர்.
விசைத்தறியாளர்கள் சிலர் கூறுகையில்:
பெட்ஷீட் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற அசாதாரண சூழலில், நூல் விலை உயராமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.