

திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின் ரோட்டை இணைக்க உயர்மட்ட பாலம்1.5 கி.மீ., தூரத்துக்கு கட்டும் பணி 2011-ம் ஆண்டு தொடங்கியது. வழக்குகள், நடைமுறை சிக்கல்கள் காரணமாக 10 ஆண்டாக நடந்து பணி முடியவில்லை.
நீண்ட இழுபறிக்கு பின் நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளனர்.
கடந்த வாரம் மேயர், எம்.எல்.ஏ., ஆய்வு நடத்தி பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினர். பாலத்தின் மீதமுள்ள தூண்களை பதிக்க ஏதுவாக, ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் 15 முதல் 35 அடிக்கு குழி தோண்டும் பணி தொடங்கி உள்ளது.
வழக்கமாக குழி தோண்டும் போது ஈரமண், கிணற்று மண், பாறையின் உடைந்த துகள்கள் வருவது வழக்கம். ஆனால்இப்பகுதியில் கருப்பு நிற மண் மட்டுமே 10, 15 அடி கடந்த பின்பும், பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
பாலம் நிறைவு பெறும் சூர்யா காலனி மேற்கு பகுதியில் 100 அடி பாறைக்குழி பல ஆண்டுகளாக இருந்தது. 2013-ல் மாநகராட்சி குப்பை கொட்ட இடமில்லாததால், பாறைக்குழியில் மூன்று ஆண்டுகள் குப்பை கொட்டப்பட்டது.
பாறைக்குழி நிறைந்து சமமான தளமாக இடம் மாறி விட்டது. பாறைக்குழி இருந்த இடத்தில் தற்போது பொக்லைன் மூலம் குழிதோண்டுவதால் நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் இருந்து வெளியே வருகிறது என்றனர்.
பிளாஸ்டிக் தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு, உறுதிமொழியெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காலம்காலமாக நாம் பிளாஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அவை மக்குவதில்லை. மண்ணுக்கு எதிரியாகி வருகின்றன என்பதற்கு தற்போது மண்ணுக்குள் இருந்தே வெளியே எடுத்து எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளே சாட்சி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.