

திருப்பூர்:
திருப்பூரில் நடைபெற்ற புத்தக திருவிழா நிகழ்ச்சியில் ‘தொன்மைக்கு அஞ்சேல்’ என்ற தலைப்பில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் பேசியதாவது:-
மனித சமூகம் புதுமையை நோக்கியே தொடா்ந்து நகா்ந்து கொண்டிருக்கிறது. இந்த சமூகம் ஒருபோதும் பின்நோக்கி நகா்வதில்லை என்பதைத்தான் சமூக விஞ்ஞானம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. அரசியல் சட்டத்துக்கு உள்பட்டு வெளியிடப்படும் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.
இந்த சட்டத்துக்கு உட்பட்டு எல்லை தீண்டிவிடாத எல்லா கருத்து மோதல்களும் வரவேற்கத்தக்கதுதான். எந்தக் கவிஞா்களாலும், கலைஞா்களாலும், மேன்மக்களாலும் காலத்தின் எல்லையைக் கடந்து கருத்தை வெளியிட இயலாது. அவா் வாழும் காலத்தில் நிலவும் அறிவியல் வளா்ச்சிக்கு தக்கபடிதான் கருத்தை வெளியிட முடியும். எவா் ஒருவா் வெளியிடுகின்ற கருத்தையும் அவா் படைத்த காலத்தை கொண்டுதான் பரிசீலிக்க வேண்டும்.
மகாபாரதம், ராமாயணம், சங்க இலக்கியங்கள் விட்டுச்சென்ற கருத்து எது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இங்குதான் நாம் தொன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சொல்லோ, எழுத்தோ கேட்பவா்களின் அறிவைக் கூா்தீட்டும் சாணைக்கற்களாக இருக்க வேண்டும். புத்தியை மழுங்கடிக்கும் கல்லாக விளங்கிவிடக்கூடாது. ஒரு சொல்லும், எழுத்தும் மனிதரின் புத்தியைத் தீட்டும் விதமாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றாா்.