

உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தாலுகாவில் மலைகிராம பகுதிகள் உள்ளன. அப்பகுதி மக்கள் வன சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். இதர அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் வனச்சட்டப்படி தகுதியான குடியிருப்புகளுக்கு வன உரிமைச்சான்று வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வன உரிமைக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி உட்பட வன உரிமைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், செட்டில்மென்ட் பகுதி மக்களுக்கான சான்று வழங்குவது, அடிப்படை வசதிகள் செய்வது போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன உரிமைக்குழு கூட்டத்தில், குருமலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வன உரிமை சான்று வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறுகையில்:
மாவட்டத்தில் உள்ள, ‘செட்டில்மென்ட்’ பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வன உரிமை சான்று வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் பட்டா வழங்குவது போல் வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வனச்சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வன உரிமை சான்று வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் இதுவரை 15 சதவீத மக்களுக்கு வன உரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு 3 மாதங்களுக்குள் வன உரிமைச்சான்று வழங்கப்படும். வன உரிமைக்குழு மூலம் வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை கேட்டு உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.