விதிகளை பின்பற்றி ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் - அதிகாரி அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் பள்ளி பஸ் இயக்கம், டிரைவர், உதவியாளர் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்துறையினர் கண்காணித்து அறிக்கை அளிக்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளி வளாகத்தில் 2ம் வகுப்பு மாணவன் தீக்ஷித் மீது பள்ளி வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார். பள்ளி வாகனத்தை விட்டு இறங்கி வகுப்பறைக்குள் வராமல், வாகனத்தின் அருகிலேயே மாணவர் நின்றதை டிரைவர், உதவியாளர் கவனிக்கவில்லை. இதனால் விபத்து நேர்ந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி பஸ் இயக்கம், டிரைவர், உதவியாளர் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்துறையினர் கண்காணித்து அறிக்கை அளிக்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. 

அதன்பின் தனியார் பள்ளி பஸ், வேன் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்படும். திருப்பூர் மாவட்டத்தில் பல தனியார் பள்ளி பஸ்கள் உதவியாளர் இல்லாமல் இயங்குகிறது. குழந்தைகள் தங்களாகவே பஸ்சில் ஏறி, இறங்க வேண்டிய நிலையுள்ளது. 

ஆட்டோக்களில் 6 முதல் 8 குழந்தைகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் வரை துணி மூட்டை போல் குழந்தைகள் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.

விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை டிரைவர்கள் உணர்வதில்லை. ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளும் பள்ளிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து அவ்வப்போது பள்ளிவேலை நேரத்தில் கண்காணிக்க வேண்டும்.

திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., விஜய் ஆனந்த் கூறுகையில்:

போக்குவரத்து துறையினர் உத்தரவை பின்பற்றி பள்ளி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. புதிய உத்தரவு வந்தால் அதற்கேற்ப ஆய்வாளர் குழு மூலம் பள்ளி பஸ் செயல்பாடு குறித்து ஆராயப்படும். ஆட்டோக்களில் விதிமுறைக்கு உட்பட்டு மட்டுமே பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும். விதிமீறுவோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com