

திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு எந்திர வாக்குகளை எண்ண வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான எஸ்.வினீத்திடம், அ.தி.மு.க. மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் சார்பில் அக்கட்சியின் வக்கீல்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு வார்டுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எண்ணும்போது முதலில் தபால் வாக்குகளை எண்ணி ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகளை அவர்களது முகவர்களிடம் தெரிவித்து கையெழுத்துப் பெற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு தபால் வாக்கு முகவரை நியமிக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெறவும், ஆளும் கட்சிக்கு சாதமாக முடிவுகள் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ஜனநாயக முறைப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.