மீண்டும் நூல் விலையை உயர்த்தக்கூடாது - பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு

பஞ்சு, நூல் விலைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பருத்தி பஞ்சு விலை உயர்வால், தமிழக நூற்பாலைகள், ஒசைரி நூல் விலையை உயர்த்தி வருகின்றன. மாதம்தோறும் நூல் விலை உயர்த்தப்படுவதால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், திட்டமிட்டு ஆடை தயாரிப்பை தொடர்வது சிக்கலாகிறது. ஆடை உற்பத்தி செலவினம் அதிகரிக்கிறது. 

அதற்கேற்ப வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு விலை உயர்வு பெற முடிவதில்லை. ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பதும், வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து புதிய ஆர்டர்களை பெறுவதும் இயலாததாகிறது.

ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, நூற்பாலைகள், புதிய நூல் விலையை அறிவிக்கின்றன. நாளை மார்ச் 1-ந் தேதி என்பதால் இம்மாதமும் நூல் விலை உயர்த்தப்படுமோ என திருப்பூர் பின்னலாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:

தொடர் நூல் விலையால், திருப்பூரில் உள்ள குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஆர்டர் இழப்பு, லாபம் இழப்பு, நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. பஞ்சு, நூல் விலைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது.

வெளிநாட்டு வர்த்தகர்கள், ஆயத்த ஆடைகளுக்கு ஏற்கனவே விலை உயர்வு பெற்றுள்ளோம். அந்தவகையில் கணக்கிடும்போது கிலோவுக்கு 50 ரூபாய் நூல் விலை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. நூல் விலையை மேலும் உயர்த்தினால் பல நிறுவனங்கள், பின்னலாடை உற்பத்தியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பர். நாளை 1-ந்தேதி, தமிழக நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்த கூடாது. விலையை குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com