

உடுமலை:
குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன காலத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அதிக தண்ணீர் தேவையுள்ள வாழை, சின்னவெங்காயம் உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அதன்படி பெதப்பம்பட்டி, வாகத்தொழுவு, கொங்கல்நகரம், இலுப்பநகரம், மூங்கில்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பயிராகவும், தென்னந்தோப்புகளில், ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது கோடை கால மழை குறிப்பிட்ட இடைவெளியில் பெய்தாலும் மழை இல்லாத நாட்களில் பகலில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சீதோஷ்ண நிலையால் வளர்ச்சி தருணத்திலுள்ள வாழையில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.
வாழை குருத்து விடும் போது அதிக சுருக்கம், இலையில், பச்சையம் பாதித்து சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுகிறது. வளர்ச்சி தருணத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் வாழை மரங்கள் பாதித்து, மகசூல் குறையும். நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை.
எனவே தோட்டக்கலைத்துறையினர் வாழை சாகுபடி உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி நோய்த்தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.