

உடுமலை:
உடுமலை பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழிலும் இடம் பெறுகிறது. சமீப காலமாக தென்னை விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் நோய்த்தாக்குதலும் முக்கிய இடம் பிடிக்கிறது.
இதை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். குடிமங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான 54 ஆயிரத்து 610 ஏக்கரில் தென்னை மட்டும் 28 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் வடகிழக்கு பருவமழை சீசனிலும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடியில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய்த்தாக்குதல்கள் பரவி பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகிறது.
காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு, நத்தை புழு போன்ற பூச்சி தாக்குதல்களும், வாடல் நோய், சாறு வடிதல் நோய் மற்றும் இலைக்கருகல் நோய் ஆகிய நோய்த்தாக்குதல்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக வெள்ளை ஈ தாக்குதல் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்படுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிரந்தர தாக்குதலாக மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்திருந்த இந்நோய்த்தாக்குதல் கோடை காலம் துவங்கியதும் வேகமாக பரவி வருகிறது.
தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்து வரும் விவசாயிகள், சாகுபடியில் வேகமாக பரவும் நோய்த்தாக்குதலால் திணறி வருகின்றனர்.
வேளாண்துறை சார்பில் ஒவ்வொரு சீசனின் போதும் விவசாயிகளுக்கான சாகுபடி வழிகாட்டுதல்கள், நோய்த்தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும்.
ஆனால் பிரதான சாகுபடியான தென்னையில் பொருளாதார சேதம் நிரந்தரமாகியும், வேளாண்துறையினர் இதுவரை ‘மவுனம்‘ சாதித்து வருகின்றனர். கிராமங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் எட்டிப்பார்க்காததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
தனியார் பரிந்துரை அடிப்படையில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கூட வாங்கி, தென்னை மரங்களுக்கு வேர் வழியாகவும், நேரடியாகவும் தெளித்து வருகின்றனர். இதனால் மண் வளமும், இயற்கை சூழலும் பாதிக்கும் அபாயம் இருந்தும் வழிகாட்டுதல் இல்லாமல் இத்தகைய விபரீத முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபடும் சூழல் வேளாண்துறையினர் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறையின் திட்டங்கள் அனைத்து தரப்பினரும், எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில், அரசின் ‘உழவன்’ செல்போன் செயலி பயன்பாட்டில் உள்ளது. இதில் ஒவ்வொரு கிராமத்துக்கான அலுவலர் பெயரும், தொடர்பு எண்ணும், வெளியிடப்பட்டிருக்கும்.
ஆனால் குடிமங்கலம் வட்டார வேளாண்துறையின் பதிவில் கிராமத்தின் பெயர்களே தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமம்தோறும் அறிவிக்கப்பட்ட தொடர்பு மையத்துக்கும் அதிகாரிகள் முறையாக வருவதில்லை என விவசாயிகள் அரசுக்கு புகார் மனு அனுப்பி வருகின்றனர்.
பிரதான சாகுபடியான தென்னையை பாதுகாக்கும் வகையில், கிராமம்வாரியாக, வேளாண்துறையினர் நேரடி ஆய்வு நடத்தி நோய் தடுப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.
நோய்த்தாக்குதலை தடுப்பதற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் மானியங்களை விவசாயிகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. உடுமலை விவசாயிகளின் முக்கிய பிரச்சினையை தீர்க்க தமிழக அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.