

உடுமலை:
உடுமலை தாலுகாவில் பி.ஏ.பி., பாசனத்தில் 4 மண்டலங்களிலும் 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது கிராமங்களிலுள்ள, பகிர்மான மற்றும் கிளை கால்வாய்கள் கண்காணிப்பில் ‘லஸ்கர்’ எனப்படும் மடை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணியாற்றவும், மடை திறத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், பொதுப்பணித்துறை, நீர் வள ஆதாரத்துறையின் கீழ் கட்டிடங்கள் கட்டப்பட்டன. முன்பு பொதுப்பணித்துறையின், கிராம கிளை அலுவலகங்கள் போல இக்கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் மடை கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிராமங்களிலுள்ள நீர்வள ஆதாரத்துறையின் கட்டிடங்கள் பராமரிப்பின்றி பழுதடைய துவங்கின. உதாரணமாக ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி பெரிசனம்பட்டியில் உள்ள, இவ்வகை கட்டிட வளாகம் புதர் மண்டி காணப்படுவதுடன், கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே போல் புக்குளம், பூலாங்கிணறு, கொங்கலக்குறிச்சி உட்பட பல கிராமங்களில் கட்டிடங்கள் பாழடைந்து காணப்படுகின்றன.
தங்கள் துறைக்குரிய கட்டிடத்தின் அவல நிலையை நீர் வளத்துறையும் கண்டுகொள்வதில்லை. அரசு கட்டிடங்களை பராமரித்து புதுப்பிக்கும் பொதுப்பணித்துறையின் கட்டிட பிரிவு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் பயன்படாமல் வீணாகி வரும் கட்டிடங்களை புதுப்பித்து மாற்று தேவைக்காவது பயன்படுத்தலாம் என பல முறை வலியுறுத்தியும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
அரசு நிதியில் கட்டப்பட்டு, சமூகவிரோத செயல்களுக்கு மட்டும் தற்போது பயன்பட்டு வரும், கட்டிடங்களின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கரட்டுபதி கிராமம் அமைந்துள்ளது.
அமராவதி அணை அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில், பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் கிராம சுகாதார மேம்பாட்டுக்காக வனத்துறை சார்பில் ரூ. 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் திப்பீட்டில், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
திறந்தவெளி கழிப்பிடம் என்ற அவல நிலையை மாற்ற இந்த வளாகம் கட்ட வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவு பெற்றும் இன்னும் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. உடனடியாக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.