

உடுமலை:
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது.
நீண்ட கால பயிராக தென்னையும், சீசன் சமயங்களில் மக்காச்சோளம் உட்பட சாகுபடிகள் பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது.
அறுவடை சீசனில் செயற்கையாக விலை வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு விளைபொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை என நீண்ட காலமாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விளைபொருட்களை இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட விற்பனைக்குழுவின் கீழ் உடுமலை, பெதப்பம்பட்டி, மடத்துக்குளத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 15 ஆயிரத்து 900 மெட்ரிக்., டன் கொள்ளளவு உடைய 5 பெரிய குடோன்கள் உள்ளன.
மக்காச்சோளத்தை தரம் பிரிப்பதற்கான எந்திரங்கள் உடுமலை, பெதப்பம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 45 பெரிய உலர்களங்கள் உள்ளன.
உடுமலை உட்பட 5 இடங்களில் குளிர் பதன கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த வசதிகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தி கொள்வதுடன் குடோன்களில் இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு, பொருளீட்டுக்கடனும் பெற்றுக்கொள்ளலாம்.
தற்போது மக்காச்சோளம் அறுவடை துவங்கி வரும் நிலையில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் வசதிகளை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு வரும் விளைபொருட்களை இடைத்தரகர் இல்லாமல் விற்பனை செய்ய தேசிய வேளாண் சந்தை திட்டம் ‘இ -நாம்‘ செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்களது விளைபொருட்களை மின்னணு முறையில் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யலாம்.
வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் பட்டுவாடா செய்யப்படும். எலக்ட்ரானிக் எடை தராசுகள் வாயிலாக துல்லியமான எடையை தெரிந்து கொள்ளலாம்.
செல்போனில் இந்தியாவிலுள்ள அனைத்து ‘இ-நாம்‘ சந்தைகளின் விலை விபரத்தை தெரிந்து கொள்ளலாம். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் இத்திட்டம் வாயிலாக பயன்பெறலாம்.
இதுகுறித்து பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில்,
‘’மக்காச்சோளம் அறுவடை சீசனில் உரிய விலை கிடைக்க ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 100 கிலோ கொண்ட 5 ஆயிரம் மக்காச்சோளம் மூட்டையும், 13 ஆயிரம் மூட்டை கொப்பரையும் குடோன்களில் இருப்பு செய்யப்பட்டுள்ளது. உலர் கள வசதியும் உள்ளது.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விளைபொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். தேசிய வேளாண் சந்தை திட்டத்துக்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் செய்யப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.