

உடுமலை:
போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் போலீசாருக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில், 2வது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும்.
இதற்காக, தனியாக அதிகாரி நியமித்து கண்காணிக்க வேண்டும். சிறந்த நிலையங்களை தேர்வு செய்து, வெகுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு சரிவர பின்பற்றப்படவில்லை.
தற்போது அனைத்து மாவட்ட, மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்கள் தூய்மை செய்யப்பட்டு அறிக்கை அளிக்க டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டார். டி.ஜி.பி., யின் உத்தரவால் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் உட்பட 12 நிலையங்கள், கமிஷனர் அலுவலக வளாகம், கோர்ட்டு வீதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு ஆகியன தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
செடி, புதர், குப்பை ஆகியன அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு டி.ஜி.பி., க்கு அனுப்ப உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ் நிலையங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் போது அங்கு பொலிவு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.