

திருப்பூர்:
திருப்பூர் ஜவுளித்துறையின் ஓர் ஆண்டு வர்த்தகம் மட்டும் ரூ.60,000 கோடி ஆகும். இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஜவுளி ஏற்றுமதிகளில் 55 சதவீதம் திருப்பூரில் தான் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஜவுளித்துறையை சார்ந்து இயக்கும் 8,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர் ராமச்சந்திரன் கூறியதாவது:
ஜவுளித்துறை தான் திருப்பூரில் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. ஆனால் இந்த நூல் விலை உயர்வால் தொழில் மந்தமடைய ஆரம்பித்திருக்கிறது. இந்த தற்காலிக வேலைநிறுத்தம் தொடர் வேலைநிறுத்தமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எங்களுக்கு உள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு தான் தற்போது ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியது. இந்த தொழில் முடங்கினால் திருப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
மேலும் பருத்தி இறக்குமதி, ஆடைத்தொழிலில் சீனாவின் குறுக்கீடு குறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சம்பத் கூறுகையில்:
பொருளாதார மந்த நிலைக்கு பிறகுமே ஜவுளித்துறை முந்தைய நிலையை அடையவில்லை. பெரிய வர்த்தகர்களாலே தற்போதைய விலை உயர்வை சமாளிக்க முடியாத நிலையில் சிறிய வர்த்தகர்கள் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்.
2011-ல் இதே போல் அத்தியாவசிய பொருள் விலை உயர்வால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்றன. தற்போது அதை விட மோசமான நிலை உள்ளது.
தற்போதைய பருத்தி மற்றும் நூல் விலை வரலாற்றில் இல்லாத உச்சம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ஜவுளித்துறை நலிவடைந்து தான் வருகிறது.
வெறும் வர்த்தக மதிப்பை வைத்து மட்டும் எல்லாம் சீராக இருப்பதாக சொல்லிக் கொள்ள முடியாது. 2016 - 2017 காலகட்டத்தில் இருந்த வர்த்தக அளவைக் கூட நாம் எட்டவில்லை என்பது தான் உண்மை. இந்த நிலை தொடர்ந்தால் ஜவுளித்துறை மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என்றார்`
மேலும் இது தொடர்பாக பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில், மூலப்பொருட்களின் வரலாறு காணாத நூல் விலை உயர்வு ஜவுளித்துறையை கடுமையாக பாதித்துள்ளது. நூல் விலை கிலோ ஒன்றுக்கு 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஏற்றுமதி ஆர்டர்கள் பெறுவதற்கான மாதிரிகளை அனுப்பி மூன்று மாதங்கள் கழித்து தான் ஆர்டர்கள் உறுதி செய்யப்படும். ஆனால் நூல் விலை உயர்வால் 3 மாதங்கள் முன்பு ஒப்புக்கொண்ட விலைக்கு தற்போது எங்களால் ஆடைகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை.
இதனால் ஏற்றுமதி தேக்கமடைந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் உடனடியாக நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீது உள்ள 11 சதவீதம் வரியை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்நாட்டு தேவைகளுக்குப் பிறகே நூல், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தியாவில் நிலைமை சீராகும் வரை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடைவிதிக்க வேண்டும் என்றார்.
ஜவுளித்துறையில் உள்ள இத்தனை பிரச்சனைகளை தெரிவிக்கத்தான் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசாங்கம் தலையிட்டு விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.