

திருப்பூர்:
ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் அமர்வுப்படி 10 மடங்கும், ஊராட்சி தலைவர், உறுப்பினருக்கான அமர்வுப்படி 5 மடங்கும் உயர்த்தப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார். பெரும்பாலான, மக்கள் பிரதிநிதிகளுக்கு, அமர்வுப்படி, பயணப்படி தனித்தனியாக எவ்வளவு வழங்கப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக, அமர்வுப்படி, பயணப்படியும், தலைவர், கவுன்சிலர்களின் வங்கி கணக்கு வாயிலாக வழங்கப்படுவதால், அதுகுறித்து யாரும் கண்டு கொள்வதில்லை. ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கூறுகையில், அமர்வுப்படி, பயணப்படியை, யாரும் எதிர்பார்ப்பதில்லை.
மக்களுக்கு சேவை செய்ய பதவிக்கு வந்திருக்கிறோம். அதனால், படி வழங்குவதை கண்டுகொள்வதில்லை. இருப்பினும் அமர்வுப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்கு நன்றி. ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும், வார்டு வாரியாக நிதி ஒதுக்கி, வளர்ச்சி பணிகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும், என்றனர்.
ஊராட்சி தலைவர்கள் கூறுகையில்:
ஊராட்சிகளுக்கு, போதிய அளவு ஊராட்சி அலுவலகம், மகளிர் குழு கட்டிடங்கள் உள்ளன. கிராம செயலகம் என்று அமைத்தாலும் தேவையான போது பயன்படுத்திவிட்டு, மற்ற நாட்களில் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு வழங்க திட்டமிடலாம்.
அமர்வுப்படியை உயர்த்தியதை வரவேற்கிறோம். நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில், ஒரு உதவியாளரை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் இதனால் நிர்வாக பணிகள் எளிதாக மாறும் என்றனர்.