

திருப்பூர்:
அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை உபரிநீரை கொண்டு உப்பாறு, வட்டமலைக்கரை அணைகளை நிரப்பவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:-
உப்பாறு மற்றும் வட்டமலைக்கரை அணைகளுக்கு 30 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. அமராவதி மெயின் கால்வாயை அகலப்படுத்த வேண்டும். நாட்டுக்கல் பாளையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டினால் அமராவதியில் திறக்கப்படும் உபரிநீரை உப்பாறு அணைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.
அதேபோல் உப்பாறு அணையின் இடது கால்வாயின் கடை மடைபகுதியான குள்ளாயய்பாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டி வட்டமலைக்கரையுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அரசூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்துக்கு பெரிய புதை குழாய் அமைத்தால் திருமூர்த்தி அணை நீரை சேதாரமின்றி உப்பாறு அணையை வந்தடையச் செய்ய முடியும்.
இவ்விரு திட்டங்களை செயல்படுத்தினால் உப்பாறு, வட்டமலைக்கரை அணைகளை வறட்சியில் இருந்து மீட்டெடுக்கலாம். அரசும், அதிகாரிகளும் முயற்சி செய்தால் இது சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.