

திருப்பூர்:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கை குறித்து திருப்பூர் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம்:
இந்த நிதிநிலை அறிக்கையில் பின்னலாடை உற்பத்திக்கான பட்டன், ஜிப், டிரிம்பிங், லைனிங் மெட்டீரியல், அட்டைப் பெட்டி உள்ளிட்ட பொருள்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் வரிக் கட்டணத்தை எளிமைப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெக்ஸ்டைல் டெக்னாலஜி டெவலப்மென்ட் திட்டங்களில் மூலதன மானிய சலுகை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தொழில் நுட்ப நிதி திட்டத்துக்கு கடந்த ஆண்டை போலவே ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் உத்தரவாதக் காப்பீட்டை ரூ.50 ஆயிரம் கோடியாக விரிவுபடுத்தியுள்ளது திருப்பூர் போன்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நன்மைப் பயக்கும். மேலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் உள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் நரேந்திரகுமார் கோயங்கா:
இந்த நிதி நிலை அறிக்கை பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையிலும், நாட்டின் உள்கட்டமைப்பை வலுவாக்கும் நோக்கிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதார வளர்ச்சிக்கானதாகும்.
ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான உதிரிபாகங்கள் மற்றும் அலங்கார பொருள்கள் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் 2023 மார்ச் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் செயல்திறனை அதிகரிக்கும் வரையில் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாகும் என்றார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன்:
கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னால் இருந்த நிலைக்கு தொழில்களை சீராக்க நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்களுக்கான சலுகைகள் மற்றும் கடன் வசதி நீட்டிப்பு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
வருமான வரி அறிக்கையைத் திருத்தம் செய்ய 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்துள்ளது புதிய அம்சமாகும். இந்த நிதிநிலை அறிக்கையில் பின்னலாடை தொழிலுக்கு ஆதரவாகவோ அல்லது ஊக்கம் கொடுக்கும் வகையிலோ எந்த அறிவிப்பும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
நூல் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. எனவே நூல் விலை உயர்வை குறைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்: திருப்பூர் பின்னலாடைத் துறைக்குத் தேவையான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெரு நிறுவனங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்த விதமான அறிவிப்பும் இல்லாதது திருப்பூர்தொழில் துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும் என்றார்.