

திருப்பூர்:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் 2 வங்கி கணக்குகளுக்கு இடையே பணம் அனுப்புவதும், பெறுவதும் எளிதானதாகவும், விரைவானதாகவும் மாறியுள்ளது.
என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை தரவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துகிறது.
இரு வங்கி கணக்குகளுக்கு இடையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை இது எளிமைப்படுத்துகிறது. என்.பி.சி.ஐ.,ன், ‘பீம்‘ மற்றும் ‘பேடிஎம்‘, ‘போன்பே’, ‘கூகுள்பே’ உள்ளிட்ட செயலிகள், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கைகொடுத்துவருகின்றன.
வங்கி கணக்கு விவரம் இன்றி ஒருவரின் செல்போன் எண், யு.பி.ஐ., முகவரியை பயன்படுத்தியும், க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்தும், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் என ஏராளமான வழிமுறைகளில் எளிதாக பணம் அனுப்ப, பெற முடிகிறது.
செல்போன் ரீசார்ஜ், மின்சாரம், காஸ், கேபிள் கட்டணம், பெட்ரோல், டீசல், பொருட்கள் கொள்முதலுக்கான தொகையை வர்த்தகர்களுக்கு செலுத்துதல் என அனைத்து சேவைகளையும், பணமில்லா பரிவர்த்தனை மூலம் பெறமுடிகிறது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா பரவலுக்கு பின் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
பின்னாடை உற்பத்தியை பிரதானமாக கொண்ட திருப்பூர் மாவட்டத்தில் வெளி மாவட்டம், வெளி மாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் பெட்டிக்கடை, மளிகை, பேக்கரி, இறைச்சி, மீன் விற்பனை, தள்ளுவண்டி வர்த்தகம், ஓட்டல், காய்கறி உள்பட அனைத்து குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்களும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
அனைத்துவகை வர்த்தக நிறுவனங்களிலும் ஸ்கேனிங் மூலம் பணம் அனுப்பும் க்யூ.ஆர்., கோடுகளை காணமுடிகிறது. கையில் ரூபாய் நோட்டு இன்றியே தேவையான அனைத்து சேவைகள், பொருட்களை வாங்கமுடிகிறது.
அதனால் மக்கள் மத்தியிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வழிகளை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முன்னோடி மேலாளர் அலெக்சாண்டர் கூறுகையில்,
மாநில வங்கியாளர் குழும புள்ளி விவரப்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில், வங்கியின் நேரடி தொடர்பு இன்றி ரூ. 31 லட்சத்து 48 ஆயிரத்து 480 கோடிக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
இதில், பீம், யு.பி.ஐ., வாயிலாக மட்டும்,ரூ. 13 லட்சத்து 18 ஆயிரத்து 266 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. வர்த்தகர், மக்கள் மத்தியில், வங்கியின் நேரடி தொடர்பு இல்லாத, டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
வங்கிகளும், வாடிக்கையாளர்கள் சுயமாக பணம் அனுப்புவதற்கான சேவைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில், தொகை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படுவதால் வரி ஏய்ப்பு தடுக்கப்படும்.
நேர்மையான வர்த்தகத்துக்கு வழிவகுக்கும். சில்லரை தட்டுப்பாடு சார்ந்த பிரச்சினைகளும் விலகும். வரும் காலங்களில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும். அனைவரையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பயன்படுத்த, வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.
ஆன்லைன் பரிவர்த்தனையில் சைபர் குற்றங்களும் நடக்கின்றன. நூதன வழிகளில் வங்கி கணக்கில் உள்ள தொகையை கபளீகரம் செய்துவிடுகின்றனர்.
இத்தகைய மோசடியாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம் என்றார்.