நடுரோட்டில் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம் - பல்லடத்தில் பரபரப்பு

அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பல்லடத்தில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள். 
பல்லடத்தில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள். 
Published on

 பல்லடம் : 

பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றிரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ராஜன் பஸ்சை ஓட்டினார். பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது அந்த பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(வயது 21),உதயசந்திரன்(23) ஆகியோர் திருப்பூர் செல்வதற்காக பஸ்சிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

வாலிபர்கள் தகராறு

அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். இடை நில்லா பஸ் என்பதால் அந்த பஸ் நிற்காமல் சென்றது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, உதயசந்திரன் ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்று ராயர்பாளையம் பஸ் நிறுத்தம்அருகே, அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி டிரைவர் ராஜனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.

டிரைவர்கள் போராட்டம்

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ் ஓட்டுநர்கள், சிரஞ்சீவி, உதயச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து டிரைவர்கள் பஸ்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூர்- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com