ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு

தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் கொள்ளை கொட்டாயை சேர்ந்தவர் வேலு (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 30 ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அதிலிருந்த ஒரு ஆடு திடீரென அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்றுவதற்காக வேலு கிணற்றில் குதித்தார்.

அப்போது கிணற்றின் மூழ்கி பக்கவாட்டில் மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். வேலு கிணற்றில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். முடியாததால் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர்.

இரவு நேரம் ஆனதால் தேடும் பணி கைவிடப்பட்டது. மேலும் அதிகாலை தீயணைப்புத் துறையினர் வந்து சிறிது நேர தேடலுக்குப் பிறகு வேலு உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com