

நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை உள்ளது.
வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை இயங்கும் இந்த கால்நடை சந்தையில் வழக்கமாக ஆடு,மாடு, கோழி, கருவாடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும்.
நெல்லை மட்டுமல்லாது தென்காசி, விருதுநகர், தூத்துக் குடி, குமரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரி கள் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இதனால் செவ்வாய்க் கிழமை தோறும் மேலப் பாளையம் சந்தை களைகட்டும். வருகிற 18-ந்தேதி பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகளவில் ஆடு மற்றும் மாடுகள் விற்பனைக்கு வந்தன. குறும்பை ஆடுகள் ரூ.32 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்நிலையில் இந்த வாரமும் சந்தைக்கு ஆடு,மாடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. கருங் கிடா, செங்கிடா என விதவிதமான ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன.
பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயில்களுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று ஆடுகளை நேர்த்திக்கடனாக பலியிடுவார்கள் என்பதால் இன்று அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
பொதுமக்களும் போட்டி போட்டு ஆடு, மாடுகளை வாங்கி சென்றனர். இன்று மொத்தம் 1,774 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.88 ஆயிரத்து 700 வருமானம் கிடைத்தது. இதேபோல 591 கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. அதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.59, 100 வருமானம் கிடைத்தது.