

நெல்லை, பிப். 16
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நாளை மாலை 6 மணியுடன் வேட்பாளர்களின் பிரசாரம் ஓய்கிறது.
பிரசாரத்திற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட் பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளனர். இதனால் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சி தென் மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட பழமையான மாநகராட்சிகளில் ஒன்று. கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தின் 6-வது மாநகராட்சியாக நெல்லை உருவானது.
இதன் முதல் மேயராக 1996-ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி தேர்வு செய்யப் பட்டார். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயராணி, 2006-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த ஏ.எல். சுப்பிரமணியன், 2011-ல் அ.தி.மு.க.வில் இருந்த விஜிலா சத்தியானந்த், 2014 இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் இருந்த புவனேஸ்வரி ஆகியோரும் மேயர் இருக்கையை அலங்கரித்தவர்கள்.
நெல்லை மாநகராட்சியில் ரூ.900 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பஸ் நிலையங்கள், நவீன பூங்காக்கள், பாதாள சாக்கடை திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனாலும் இந்த பணிகளை விரைந்து முடிக்காமல் மந்த நிலையில் பணி செய்து வருவதாகவும், சுமார் 2 ஆண்டு களுக்கு மேலாக மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோச மடைந்து கிடப் பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மாநகர பகுதியில் ஓடும் நிலையில் டவுன், பெருமாள்புரம், அன்பு நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க வேண்டும் என்பது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மாநகர பகுதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் தற்போது வாக்களிக்க தயாராகி உள்ளனர். இந்த முறை எந்தெந்த கட்சிகளின் வேட்பாளர்களை மக்கள் கவுன்சிலராக்க முடிவு செய்துள்ளனர் என்பது விரைவில் தெரியும்.
இந்த முறை மேயர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மேயராக வேண்டுமெனில் முதலில் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் ஏதாவது ஒரு வார்டில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும்.
ஆனாலும் அதனையும் மறந்து கட்சி செல்வாக்கு, பணம் ரீதியிலான செல்வாக்கு, தனிப்பட்ட செல் வாக்கு கொண்ட வேட்பாளர்கள் இப்போது மேயர் பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர்.
கடந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்த முறை பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண் வேட்பாளர் கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கட்சிகளைப் பொருத்த வரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவை மட்டுமே பிரதான கட்சிகளாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளும் 40&க்கும் மேற்பட்ட வார்டுகளில் நேருக்கு நேர் மோதுகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க. மாநகராட்சியில் 47 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 3 இடத்திலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், சி.பி.ஐ. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு இடங்களிலும் போட்டி யிடுகின்றன.
தி.மு.க.வைப் பொறுத்த வரை தற்போது ஆளுங்கட்சி என்பதால் வேட்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
மொத்தம் போட்டியிடும் 47 தொகுதிகளில் 40&க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று தனி மெஜாரிட்டியுடன் நெல்லை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அக்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த மாநகராட்சியை பொருத்தவரை பாளை சட்டமன்ற தொகுதி, நெல்லை சட்டமன்ற தொகுதி என்ற 2 தொகுதிகள் உள்ளன. பாளை தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்றே கூறலாம்.
இங்கு கடந்த சில தேர்தல்களில் தி.மு.க. தொடர்ந்து வென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் வரும் பாளை, மேலப்பாளையம் மண்டலங்களில் உள்ள வார்டுகளில் அதிக வெற்றி கிடைக்கும் என கட்சியினர் கருதுகின்றனர்.
நெல்லை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தற்போது அந்த தொகுதி பா.ஜ.க. கைவசம் உள்ளது. இந்த தொகுதியில் கட்சியின் செல்வாக்கு என்பதைவிட தனது தனிப்பட்ட செல்வாக்கின் காரணமாக தற்போதைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்தாக உள்ளது.
ஆனாலும் தி.மு.க.வின் கூட்டணி பலமாக இருப்பதாலும், ஆளுங்கட்சி என்பதாலும் இந்த தொகுதிக்கு உட்பட்ட நெல்லை, தச்சை மண்டலங்களில் அதிகப்படியான கவுன்சிலர்களை வென்றெடுத்து மேயர் பதவியை பிடிக்க தி.மு.க. திட்டம் தீட்டி வருகிறது.
அ.தி.மு.க.வோ இரட்டை இலை சின்னத்திற்கு உள்ள பாரம்பரிய வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று இந்த களத்தில் குதித்துள்ளனர்.
கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பாரதீய ஜனதா விலகி நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஒருபுறம் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெரும் பலத்துடன் களமிறங்கும் நிலையில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுகிறது.
பா.ஜ.க.வை பொருத்த வரை பாளை சட்டமன்றத் தொகுதியில் அவர்களுக்கு வாக்குவங்கி அந்த அளவுக்கு இல்லை. அதே நேரத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி யில் ஒரு சில வார்டுகளில் வாக்கு வங்கிகள் உள்ளது என்று அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே எப்படியும் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம். அதன் பின்னர் நடைபெறும் மறைமுக தேர்தலில் கவுன்சிலர்களை பேரம் பேசி வாக்களிக்க செய்து மேயர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்துடனும் செல்வாக்குமிக்க தி.மு.க. வேட்பாளர்கள் உற்சாகத் துடன் களத்தில் நிற்கின்றனர்.
ஒரு சில வேட்பாளர்கள் தாங்கள்தான் மேயராக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போதே பெரும்பாலான கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு முழுமையாக செலவு செய்து வருகின்றனர்.
அவர்களது பிரசாரத் திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் இந்த வேட்பாளர்களே கொடுத்து வருகின்றனர். இதனால் மறைமுக தேர்தலின்போது வெற்றிபெற்ற கவுன்சிலர் களும் பண மழையில் நனைய போவது உறுதி.