

நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கன்னடியன் கால்வாயில் இருந்து திசையன்விளை அருகே உள்ள எம்.எல். தேரி வரை தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் நடைபெறும் மூன்றடைப்பு அருகே உள்ள நான்குவழிச்சாலை பாலம் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு மற்றும் திட்ட இயக்குனர் நாகராஜன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தத் திட்டம் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவுத்திட்டம். எனவே இந்த திட்டத்தை தி.மு.க. அரசு மிக விரைவாக செய்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கன்னடியன் கால்வாயில் இருந்து திசையன்விளை அருகே உள்ள எம்.எல்.தேரி வரை 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத் தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 67 கிலோ மீட்டரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 கிலோ மீட்டரும் கால்வாய் வெட்டப்படுகிறது. ரூ. 933 கோடி செலவில்
இந்த கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்கள் 2,657 கிணறுகள் நெல்லை மாவட்டத்தில் பயன்பெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள், 2,563 கிணறுகள் பயன்பெறும். இதன் மூலம் 17 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த கால்வாய்க்காக நான்கு வழி சாலை பகுதியில் ரூ. 17 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கியது.
இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளது. மிகவும் காலதாமதமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
வருகிற அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து மழை காலத்திற்குள் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணியை விரைவு படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பணிகள் விரைவு படுத்தாமல் காலதாமதம் ஆனால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.