

நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது20). இவர் மதவக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ராஜபாண்டி தன்னுடன் வேலை பார்க்கும் மாயாண்டியை அழைத்து கொண்டு மானூர் அருகே உள்ள துலுக்கர்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது சிலருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து நேற்று மாலை ராஜபாண்டி, சிவந்திப்பட்டி அருகே உள்ள தனது உறவினரான சுப்பிரமணியன் மற்றும் ரஸ்தா பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற மூக்காண்டி, மாயாண்டி ஆகியோரை அழைத்து கொண்டு துலுக்கர் பட்டிக்கு சென்று தட்டி கேட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றியதில் எதிர் தரப்பினர் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி கொலை செய்து குளத்தில் வீசினர். தடுக்க சென்ற ராஜபாண்டி, முகேஷ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ராஜபாண்டியும், மாயாண்டியும் துலுக்கர் பட்டிக்கு சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளை இடிப்பது போல் சென்றுள்ளனர்.
உடனே ராஜபாண்டி எதிரே வந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வெண் பன்றிகள் பண்ணைக்கு அந்த நபர்கள் சென்றுள்ளனர். இவரும் சென்று மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே சுப்பிரமணியனை வரவழைத்து 4 பேரும் சேர்ந்து தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது தான் 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.