

நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாளையொட்டி இன்று ஏராளமானவர்கள் மேயர் சரவணனிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் குணசேகரன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோரிடம் தனித்தனியாக கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு காரணமாக வணிகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை நகர்புற பகுதிகளில் உயர்த்தியிருப்பது வணிகர்கள் நலனை முற்றிலும் பாதிக்கும்.
இங்கு 90 சதவீதம் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு காரணமாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
எந்தவித தொழிற்சாலையும் இல்லாத பின்தங்கிய பகுதியான நமது மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
அப்போது நெல்லை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராமச்சந்திரன், சாப்டர் பள்ளி தாளாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் லட்சுமி உமாபதி சிவம் தலைமையில் கொடுத்த மனுவில், 33 -வது வார்டில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. எனவே அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பெருமாள்புரம், சாந்திநகர் திம்மராஜபுரம் மகாராஜா நகர் என்.ஜி.ஓ காலனி ஆகிய பகுதிகளில் மரணமடையும் மக்கள் உடலை பாளையங் கோட்டையில் அமைந்துள்ள வெள்ளகோவில் மின்சார எரியூட்டும் மையத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு தற்போது கொட்டகை பழுதடைந்து உள்ளது. எனவே அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், 15-வது வார்டுக்கு உட்பட்ட தைக்கால் பள்ளிவாசல் தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்கு உள்ள பொது வழிப்பாதையில் 10 மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் அதில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. எனவே அதில் மின் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
38-வது வார்டுக்கு உட்பட்ட வீதி நகரை சேர்ந்த பொதுமக்கள் நலச் சங்கத்தினர் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு வீட்டு தீர்வை நிலுவை இல்லாமல் மாநகராட்சிக்கு இதுவரை சரியாக கட்டி வருகிறோம்.
ஆனால் எங்களுக்கு தண்ணீர் இணைப்பு, தெருவிளக்கு, பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை. எங்கள் பகுதியில் குடியிருக்கும் மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாநகராட்சி 12-வது வார்டுக்குட்பட்ட மேகலிங்கபுரம் வடக்குதெரு ஆற்றங்கரை செல்லும் பாதை பகுதிகளில் மோசமாக உள்ள மின் கம்பங்களை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட வேண்டும் என்று 12-வது வார்டு உறுப்பினரும் பணி நியமன குழு உறுப்பினருமான கோகிலவாணி சுரேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதேபோல் மகாலிங்கபுரம் தொடக்கப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் அமைந்துள்ள தரைத்தள சிறிய நீர்நிலை தேக்கத் தொட்டி மற்றும் பள்ளியில் உள்ள கழிப்பிடங்கள் ஆகியவற்றை சீரமைத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கூறியிருந்தார்.