

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இந்து தேசிய கட்சி தலைவர் மணி தலைமையில் மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் கட்சியினர் பட்டினப்பிரவேசம் போல் பல்லக்கில் ஒருவரை தூக்கி வந்து மனு கொடுத்தனர்.
அதில், தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசத்திற்கு தடை விதித்தது பெரும்பான்மை மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. காலம் காலமாக நடைபெற்று வரும் மரபு இது. குருவிற்கு சிஷ்யர் பல்லக்கு தூக்கி செல்வது நன்றி கடனாகும். பல போராட்டங்களுக்கு பின்னர் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் இனி வரும் காலங்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்மாவட்ட சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தனியார் யூ-டியூப் தளத்தில் இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பி உள்ளனர். எனவே சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைக்கும் அந்த யூ-டியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஈழத்தமிழர் உரிமை நல ஆதரவு கட்சிகள் சார்பில் தமிழ்தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளா தார நெரு க்கடியான தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பொருட்கள் ஈழத்தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும்.