

நெல்லை:
கோடை காலங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் மாம்பழம் சீசன் மாதங்களாகும்.
இந்த ஆண்டு கடந்த மாதம் கடுமையான மழை பெய்ததால் மா மரங்களில் உள்ள பூ உதிர்ந்து பழம் பிடிக்காத நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் மாம்பழ சீசன் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
ஏப்ரல் முதல் வாரத்தில் மாம்பழங்கள் விற்பனைக்காக வரக்கூடிய நிலையில் காலம் தாழ்ந்து தற்போது விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளது.
வழக்கமாக நெல்லை மாவட்டத்திற்கு செங்கோட்டை, சேலம், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ரக, ரகமான மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு இந்த சீசனுக்காக மாம்பழங்கள் பல்வேறு பகுதியில் இருந்து வரத்தொடங்கி உள்ளன. இவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்திற்கு விற்பனைக்காக வந்த மாம்பழங்கள் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக கடந்த ஆண்டை விட தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும், வரும் வாரங்களில் மாம்பழம் வரத்து அதிகரிக்க தொடங்கினால் குறைந்த விலையில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கும் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தற்போது வந்துள்ள மாம்பழங்களில் அல்போன்சா மாம்பழங்கள் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், இமாம்பஸ் ரக மாம்பழங்கள் ரூ.100 முதல் ரூ.160 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல பாலாமணி ரக மாம்பழங்கள் ரூ.100- க்கும், செந்தூரம், பஞ்சவர்ணம் ரக மாம்பழங்கள் ரூ.50 தொடங்கி ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல சப்போட்டா ரக மாம்பழங்கள் ரூ. 60- க்கும், பங்கனப்பள்ளி ரக மாம்பழங்கள் 90, 100, 120 என்ற வகையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.