

திசையன்விளை:
ராதாபுரம் தொகுதி நெடுவாளி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது 65). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்ததாககூறப்படுகிறது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இது குறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறியதாவது:-
பாம்பு கடித்த பஞ்சவர்ணத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராதாபுரம் அரசு மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு உரிய மருந்து இல்லாத நிலை இருந்துள்ளது.
இதனால் அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உயிருக்கு போராடிய அவரை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு முயற்சித்தும் ஆம்புலன்ஸ் வருவதற்கும் வெகு நேரம் ஆகி உள்ளது. இதனால் தான் அவர் பரிதாபமாக உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு உரிய மருந்து இல்லாத காரணத்தினாலும், மேலும் உயிருக்கு போராடிய அந்த பெண்மணியை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வெகுநேரம் வராத காரணத்தினால் தான் அவர் உயிரிழந்து உள்ளார் என கூறினர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, பாம்பு கடித்து மரணமடைந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு தன்னுடைய சொந்த நிதியில் இருந்து உதவி தொகை வழங்கினார்.
மேலும் அரசிடமிருந்து நிதி பெற்று தர சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
அவருடன் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, நாங்குநேரி ராதாபுரம் தாலுகாக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ராதாபுரம் முருகேசன், நெல்லை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் பலர் உடன் சென்றனர்.