

நெல்லை:
கொரோனா 3-ம் அலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தினசரி பாதிப்பு படிப்படியாக உயரத்தொடங்கியது. 50-க்கும் கீழ் இருந்த தினசரி பாதிப்பு இரண்டே வாரங்களில் 800-ஐ தாண்டி அதிர்ச்சி அளித்தது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் காரணமாகவும், அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதாலும் 3-ம் அலை விரைவிலேயே வீழ்ச்சி அடைய தொடங்கியது.
இதனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு நாள்தோறும் வெகுவாக குறைந்து வருகிறது. நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை வெளியான பரிசோதனை முடிவில் 28 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநகர பகுதியில் 13 பேருக்கும், நாங்குநேரி, ராதாபுரத்தில் தலா 4 பேருக்கும், வள்ளியூரில் 3 பேருக்கும், பாளையில் 2 பேருக்கும், அம்பை, சேரன்மகாதேவி பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வட்டார அளவில் ஒற்றை இலக்கத்தை எட்டி இருப்பது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது.
களக்காடு, மானூர், பாப்பாக்குடி வட்டாரங்களில் இன்று யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.