

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பழவூர் சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சூராணிகரை நாககன்னி அம்மன் கோவிலில் 3 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற்றது.
திருவிழாவில் கணபதி ஹோமம் மற்றும் 21 வகை வாசனை திரவியங் களால் அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடந்தது. விழாவின் 3-வது நாள் மதியம் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் 108 லிட்டர் பால் கோவிலின் முன் அண்டாவில் வைத்து கொதிக்க விடப்பட்டது.
அந்தகொதிக்கும் பாலை வேப்பிலை கொத்தால் அண்டாவில் அழுத்தி பாலை தலையில்ஊற்றி பூசாரி அருள்வாக்கு வழங்கினார். இந்த கோவிலில் தரிசனம் செய்தால் பக்தர்களுக்குநோய் நொடிகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இப்பாலை அருந்தியவர்களுக்கு உடலில் எந்த ஒருநோய் இருந்தாலும் அந்த நோய் தீர்க்கும் பிணி நீக்கும் மருந்தாக விளங்குவதாக கூறும் பக்தர்களுக்கு இது அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உள்ளூர், மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பொதுவாக கோவில் திருவிழாக்களின் நிறைவாக கோவில் முன்பு மஞ்சள்போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வேப்பிலையை முக்கி உடல் முழுவதும் தெளித்து சாமியாடுவது வழக்கம்.
ஆனால் இந்த கோவிலில் சற்று வித்தியாசமாக பாலை கொதிக்க வைத்து சாமியாடுகின்றனர். மேலும் மிளகு வத்தல் எரிக்கும் பூஜையும் நடைபெற்றது.