நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக மழை- அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு

நெல்லை, தென்காசி தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்வு உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் கோடை மழை பெய்து வந்தது. நேற்று மழை சற்று குறைந்தது.

நெல்லையில் நேற்று சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காருக்குறிச்சி, புதுக்குடி, பத்தமடை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பை, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்தது. நாங்குநேரி, பாளை, களக்காடு, மூலக்கரைப்பட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ராதாபுரம் மற்றும் நெல்லையில் லேசான சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மழையின் அளவு குறைந்தது.

பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாநகர பகுதியிலும் நேற்று லேசான மழை பெய்தது. பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர். மேலும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைக்கழிவுகள் உள்ளிட்ட-வற்றையும் அகற்றினர்.

தொடர்ந்து பெய்த கோடை மழையால் சந்திப்பு மேம்பாலம், ஸ்ரீபுரம், டவுன் வழுக்கோடை, பழையபேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 50 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கயத்தாறு மற்றும் கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதி களிலும் விட்டு விட்டு மழை பெய்தது. கயத்தாறில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கழுகுமலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்-பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியரை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இதமான காலநிலை நிலவியது. அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசியது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் உள்ள அணைகளான ராமநதி, கடனா நதி, கருப்பாநதி, குண்டாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீர்பிடிப்பு பகுயில் மழை இல்லை.

அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடை மழையால் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. மொத்தம் 132 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 25.75 அடி நீர் இருப்பு உள்ளது.

குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அங்கு குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது.

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பாலம் துண்டிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com