நெல்லை மாநகரில் சாலை விதிகளை மீறும் பஸ்கள் மீது நடவடிக்கை-போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பெரும்பாலன சாலைகளில் ஆக்கிரமிப்பு இடங்களால் நெருக்கடி ஏற்படு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். மேலும் நகரப்பகுதியில் பெரும்பாலான தனியார் பஸ்கள் சாலைகளில் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகிறார்கள்.
இதுவும் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பஸ்களின் உரிமை யாளர்கள் ஆலோசனை கூட்டம் பாளையில் இன்று நடைபெற்றது.
தனியார் பஸ் உரிமையாளர் கள் சங்க தலைவர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லையா, பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பாளை போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-
தனியார் பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்நிறுத்தத் தில் மட்டுமே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும்.
இதனால் பெரும்பாலான போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கலாம். பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வைக்ககூடாது.
இதனால் தேவையின்றி விதிக்கப்படும் அபராதங்களை தவிர்க்கலாம். எனவே கண்டிப்பாக சாலை விதிகளை கடைபிடித்து பஸ்களை இயக்க வேண்டும்.- இல்லையென்றால் அபராதம் விதிப்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பேசிய பஸ் உரிமையாளர்கள் மாநகரில் 69 தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. நகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் குறுகிய தாக உள்ளது.
இதனால் எங்களுக்கு சிரமமாக உள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் சாலை விதிகளை கடைபிடித்து பஸ்களை இயக்குவோம் என உறுதி கூறினர். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.

