

நெல்லை:
நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் புறநகர் மட்டுமல்லாது, தென்காசி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து காய்கறிகள் அதிகளவில் வரும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேரட், பீன்ஸ் உள்ளிட்டவையும், திண்டுக்கல், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வந்து சேரும்.
இங்கிருந்து ஏராளமான வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று சில்லரை விற்பனை கடை களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.
இது தவிர டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்டவற்றிலும் காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்.
தை மாதத்தில் பொங்கலையொட்டி காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக காய்கறிகளின் விலை குறையத் தொடங்கி விட்டது.
தக்காளி உள்ளிட்ட காய்கறி களின் விளைச்சல் அதிகமான தால் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தது. இதனால் விலை மிகவும் குறைந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை தினந்தோறும் உயர்ந்து வருவதால் லாரி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி உள்ளனர்.
மேலும் கடந்த 1-ந்தேதி முதல் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளதால் லாரிகளின் வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தினந்தோறும் வெளிமாவட்டங் களில் இருந்து வரும் காய்கறி களின் விலை உயர தொடங்கி உள்ளது.
இன்று நெல்லையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கும், கேரட் ரூ.45-க்கும், விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர கத்தரிக்காய் கிலோ ரூ.15, தக்காளி-17, உருளைக் கிழங்கு-28, வெண்டைக் காய்-35, சீனி அவரைக்காய்-20, பல்லாரி-25, அவரைக்காய்-50, மிளகாய்-25 என விற்பனையானது.
இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைந்திருந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டோல்கேட் கட்டணத்தையும் உயர்த்தி விட்டார்கள். இதனால் காய்கறிகள் விலை உயரத்தொடங்கி உள்ளது என்றனர்.