

நெல்லை:
தமிழகத்தில் 3-வது அலை காரணமாக உச்சத்தில் இருந்த கொரோனா தினசரி தொற்று அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தினசரி தொற்று சற்று உயரத் தொடங்கி உள்ளது. எனினும் அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறிவோருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணிவது குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை, டவுன், பேட்டை, சந்திப்பு, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மார்க்கெட், சமாதானபுரம், மேலப்பாளையம், புதியபஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
கடந்த அலையின் போது நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டதுடன் அதை மீறுவோர் கண்காணிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலானவர்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்து சென்றனர்.
இதனால் பெருமளவு தொற்று குறைந்தது. ஆனால் தற்போது மாவட்டத்தில் 2 சதவீதம் பொதுமக்களே பொதுவெளியில் முககவசம் அணிந்து செல்வதாக சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். அரசு முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் நெல்லையில் அவ்வாறு செய்யப்படவில்லை. எனவே சுகாதாரதுறையினரும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து முககவசம் அணிவதை உறுதிபடுத்த வேண்டும், கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் வலியுறுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் முககவசம் அணிந்து வருவது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் திரளும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் முககவசம் அணிவதை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, முககவசம் அணியாமல் சென்றால் முதலில் ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது ரூ. 500 வசூலிக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் அது குறித்து முறைப்படி எங்களுக்கு உத்தரவு வராததால் இன்னும் அபராதம் விதிக்கவில்லை. அடுத்தவாரம் முதல் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர்.